கரூரில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா் கூட்டம்
போகிப் பண்டிகை எதிரொலியாக கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் வெறிச்சோடியது.
கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 106 மனுக்கள் மட்டும் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் முகமது பைசல், மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) பச்சமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சக்தி பாலகங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.