மெஸ்ஸி வழியில் அல்வரெஸ்..! ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய அத்லெடிகோ!
கரூர்: ``நடுநிலை வேண்டும், இவ்வளவு வேகமா ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் பின்னணி?'' - எடப்பாடி பழனிசாமி
கரூரில் நடந்த துயர சம்பவத்தை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூர் சென்றுள்ளார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும் இருந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது...
"பரப்புரை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பரப்புரையின் போது மின்சார விளக்குகள் அணைந்துள்ளன... அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்பவை எங்களுக்கு ஊடகத்தின் வாயிலாகத் தெரிய வந்தது.

தொலைகாட்சியில் பார்த்தேன்
தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதும், கூட்டம் நடக்கும் போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முன்பு, நான்கு மாவட்டங்களில் தவெக கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
அந்த நான்கு கூட்டங்களில் மக்கள் எப்படி கலந்துகொள்கின்றனர்... என்ன நிலைமை நிலவுகிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து முழுமையான பாதுகாப்பை அரசாங்கமும், காவல்துறையினரும் கொடுத்திருக்க வேண்டும்.
தொலைக்காட்சியில் பார்க்கும்போது பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பிரசாரக் கூட்டத்திலும் போதிய பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது. இதை எல்லாம் நான் தொலைக்காட்சியில் பார்த்ததைக் கூறுகிறேன்.
நடுநிலை வேண்டும்
இந்தக் கட்சி கூட்டம் மட்டுமல்ல... அதிமுகவின் எழுச்சி பயணத்தின் போதும், காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை. மூன்று, நான்கு மாவட்டங்களில் மட்டுமே பாதுகாப்பு கொடுத்தார்கள். பின், வேறு எந்த மாவட்டத்திலும் பாதுகாப்பைக் காவல்துறையினர் வழங்கவில்லை. கூட்ட நெரிசல் இருந்தால் ஒழுங்குபடுத்தும் நடைமுறையிலும் ஈடுபடவில்லை.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என ஆளும் கட்சி கூட்டம் நடைபெறும் போது, ஆயிரக்கணக்கான காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அங்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த அரசாங்கம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராமல் இந்த அரசாங்கம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

விஜய் ஆலோசனை செய்திருக்க வேண்டும்
அதிமுக ஆட்சி நடக்கும்போது பல்லாயிரக்கணக்கான கூட்டங்கள் நடந்தன. அத்தனைக்கும் அனுமதியும், பாதுகாப்பும் கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டம் நடத்துவதே சிரமம்.
நீதிமன்றத்திற்குச் சென்றுதான் கூட்டம் நடத்த வேண்டியதாக இருக்கிறது. அப்படியே கூட்டம் நடத்தினாலும், நீதிமன்றம் உத்தரவிட்டாலும், திமுக அரசு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை.
முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால், இந்தத் தள்ளுமுள்ளுகளைச் சரிசெய்து இருக்கலாம். இதுவரை நான்கு மாவட்டங்களில் பரப்புரை செய்திருக்கிறார் விஜய்.
ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது நிலைமை எப்படி இருக்கிறது... என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என ஒரு அரசியல் கட்சித் தலைவர் இந்த மாதிரியான விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கேற்ப ஆலோசனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இது அரசாங்கத்தின் கடமை
கூறப்பட்டுள்ள நேரத்தைத் தாண்டி, பல மணிநேரம் கழித்து வந்து பொதுக்கூட்டம் நடத்துகையில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும்.
இதுவரை இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. இந்தக் கட்சி... அந்தக் கட்சி என்று நாங்கள் பார்க்கவில்லை. இது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
அதிமுக போன்ற பல கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்கள் பல பொதுக்கூட்டங்களைக் கூட்டியிருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மிகுந்த அனுபவம் இருக்கிறது.
இதை பிறரும் பின்பற்ற வேண்டும். இவ்வளவு வேகமாக ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. இழப்பீடு வழங்கியுள்ளது அரசாங்கத்தின் கடமை. எந்த அரசாங்கமாக இருந்தாலும், இதைத்தான் செய்திருக்கும்." என்றார்.