``கரூர் விஷன் - 2030; ரூ.50,000 கோடி இலக்கு!'' -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?
மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்
கரூர் மாவட்டம் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வர்த்தக இலக்கு ரூ.50,000 கோடியை அடையும் வகையில், தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் 'விஷன் - 2030 50k' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிவேக நடை போட்டியில் பொதுமக்களுடன் சேர்ந்து நடந்து சென்றார்.
போக்குவரத்து நெரிசல்..
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் 5 கி.மீ.,10 கி.மீ என இருவகையான மாரத்தான் போட்டிகளும், குழந்தைகளுக்கு 5 கி.மீ. தொலைவு போட்டிகளும் நடந்தது. அதோடு, அதிவேக நடை போட்டி 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது. இரு போட்டிகளிலும் தலா 6000 -க்கும் மேலானோர் பங்கேற்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பல்வேறு பகுதிகளில் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியின் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும், ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்த பொதுமக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
`கரூரில் டைட்டில் பார்க்' - அமைச்சர் செந்தில் பாலாஜி
இதனைத் தொடர்ந்து வெண்ணமலை அட்லஸ் கலையரங்கில் நடைபெற்ற சி.ஐ.ஐ கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழில் முனைவோர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்திற்கு ரூ.3000 கோடி அளவுக்கு நலத்திட்டத் உதவிகளை திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு ஆணைகள் பெறப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில திட்டங்கள் தொடங்கவேண்டிய காரணம், நிலம் கையகப்படுத்தும் நடைமுறையால் தாமதமாகி வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
அந்த வகையில் கரூர் மாநகரில் டைட்டில் பார்க் எனும் தொழில்நுட்ப பூங்கா துவங்குவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் துவக்கப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றாலும் கூட, எனது சொந்த தொகுதியான கரூர் தொகுதியில் டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதனை நிறைவேற்றும் வகையில் பணிகள் துவங்கப்பட உள்ளது.
தொழில் முனைவோர் கூட்டமைப்பு இலக்கான கரூர் விஷன் 2030 50k என்ற இலக்கை எட்டுவதற்கு அமைச்சர் என்ற முறையில் நானும், தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று போதிய தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும். என் மீது நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிக் காட்டுவேன். எனது பொறுப்பு. எனது கடமை" என்றார்.
2030-க்குள் எட்டக்கூடிய இலக்கு...
அதனைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தில் காலாவதி ஆனதால் அகற்றப்பட்ட வணிக வளாக கட்டடத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு சுமார் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டடம் கட்டுவதற்கான பணியை செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தொழில் முனைவோர் கூட்டமைப்பினர், வரும் 2030-க்குள் எட்டக்கூடிய இலக்கை அடைவதற்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதனை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துரைத்து விரைவில் நிறைவேற்றித் தருவேன்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...