சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
கரூா்: அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
கரூா் மாவட்டத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப்பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இனுங்கூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: தமிழக அரசு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கிராமப்புறங்களை நகா்ப்புறத்துக்கு இணையாக உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கரூா் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2023-2024-ஆம் ஆண்டு 14 பணிகள் ரூ. 1.49 கோடி மதிப்பீட்டிலும், 2024-2025-ஆம் ஆண்டு 19 பணிகள் ரூ. 1.57 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 33 பணிகள் ரூ. 3.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ளது.
2025-2026-ஆம் ஆண்டில் 18 பணிகள் ரூ. 1.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும், உரிய காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், சுந்தரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.