ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர...
கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்! காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி எச்சரிக்கை
தற்போதைய தரவுகளின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதும்கூட என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் சித்தராமையா தீவிரம் காட்டி வருகிறார். இந்த அறிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக), மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜாதி அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிக்கையை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தக் கூடாது என்று முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் ஒக்கலிகர் சமுதாய எம்எல்ஏக்களும், எம்.பி.பாட்டீல் தலைமையில் லிங்காயத்து சமுதாய எம்எல்ஏக்களும் கூடி விவாதித்துள்ளனர்.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்திய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்காமல், மே 2-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தினால், சமுதாயங்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதோடு, அது அரசியல் ரீதியாக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முரண்பட்ட கருத்துகள் இருப்பதால், சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித முடிவையும் எடுக்க முடியவில்லை. பெரும்பான்மையாக கருதப்படும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயங்களின் மக்கள்தொகை குறைவாக இருப்பதாக அந்த சமுதாயங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 1992-ஆம் ஆண்டில் நான் முதல்வராக இருந்தபோது வெளியிடப்பட்ட சின்னப்ப ரெட்டி ஆணைய அறிக்கையில் இடம்பெற்ற லிங்காயத்துகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய அறிக்கையில் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள்தொகை எப்படி குறைந்திருக்கும்?; அதிகமாகித்தானே இருந்திருக்கும். எனவே இதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக சரியாக இல்லை என்ற பலரது கூற்றில் பகுதியளவை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த கணக்கெடுப்பு 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதால், மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். புதிதாக கணக்கெடுப்பு நடத்தினால்தான் துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கும். பல சமுதாயங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளதால், ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த அரசு அவசரகதியில் முடிவெடுக்காது.
தனது அமைச்சரவை சகாக்களின் நம்பிக்கையையாவது முதல்வர் சித்தராமையா பெற வேண்டும். எதிர்க்கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஒருமித்த கருத்தை எட்டியபிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தலாம் அல்லது அறிவியல்பூர்வ புள்ளிவிவரங்களை பெற முயற்சிக்கலாம்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். எனது (வீரப்ப மொய்லி) தலைமையிலான அரசு செயல்படுத்திய சின்னப்பரெட்டி ஆணையமும் இதையே வலியுறுத்தியது. அந்த அறிக்கையை அமல்படுத்தியே 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜாதிவாரி கணக்கெடுப்பால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறமுடியாது.
இதுபோன்ற அறிக்கைகளை காங்கிரஸ் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கருத்தொற்றுமை அவசியம். அதே சமயம், ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள தரவுகளின் முரண்பாடுகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், சமுதாயங்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதுடன், அரசியல் ரீதியாகவும் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
மிகவும் பின்தங்கிய சமுதாயங்களின் எண்ணிக்கையைவிட, முஸ்லிம்களின் மக்கள்தொகை 4 சதவீம் அல்லது 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதனால்தான் இது அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அல்ல என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முறையான தரவுகள் இல்லாத அறிவியல்பூர்வமற்ற கணக்கெடுப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் எதிர்ப்பார் என்றே கருதுகிறேன். சீரான புள்ளிவிவரங்கள் கொடுப்பது குறித்து அமைச்சரவை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
பெரும்பான்மை சமுதாயங்களின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக புள்ளிவிவரங்களை முதல்வர் சித்தராமையா கையாண்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. சரியான ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாதபோது, அதுபோன்ற சந்தேகங்களை மக்கள் எழுப்புகிறார்கள். எனவே, மறுகணக்கெடுப்பின்மூலம் சந்தேகங்களை அரசு களைய முற்பட வேண்டும்.
காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் நடத்தப்பட்ட அறிவியல்பூர்வ ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை கர்நாடகத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.
முதல்வர் சித்தராமையா சார்ந்திருக்கும் குருபா, மிகவும் பின்தங்கிய சமுதாயம் என்று சின்னப்ப ரெட்டி ஆணையம் கூறுகிறது. ஆனால், புதிய கணக்கெடுப்பில் மிக, மிக பின்தங்கிய சமூகம் என்று அது குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படி சமூக நீதியை வழங்க முடியும்? என்றார் வீரப்ப மொய்லி.