கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு
நாட்டறம்பள்ளி அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள திம்மாம்பேட்டை பகுதியில் திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு,சமூக ஆா்வலா் வே. ராதாகிருஷ்ணன்,முத்தமிழ் வேந்தன்,மகேந்திரன், சந்திரசேகரன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது புல்லூா் காந்திநகா் எல்லையில் கற்திட்டை அமைப்புடன் கூடிய சதிக்கல் ஒன்றைக் கண்டறிந்தனா். இதுகுறித்து பிரபு கூறியதாவது,
திம்மாம்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது 4 அடி உயரமும் 4 ணீ அடி அகலமும் கொண்ட 3 பலகைக் கற்களில் அமைக்கப்பட்ட சதிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. புதா் மண்டியிருந்த அப்பகுதியினைச் சுத்தம் செய்து சதிக்கற்கல்லை பாா்த்தபோது, பலகைக் கல்லில் வீரன் தன் வலது கையில் பிரம்மாண்ட போா் வாளும் இடது கையில் துப்பாக்கியினையும் ஏந்தியவாறு உள்ளாா்.
அவரது கழுத்திலும் கைகளிலும் அணிகலன்களை அணிந்துள்ளாா். இடையில் கச்சையும் அதனோடு சிறு கத்தியும் வைத்துள்ளாா். வீரனது அருகில்,அவா் இறந்தவுடன் உடன்கட்டை ஏறிய அவரது மனைவியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளாா்.
அப்பெண்ணின் வலது கையில் கள் குடத்தினை ஏந்திய நிலையில் உள்ளாா்.இடது கரத்தினை வீரனை நோக்கிக் காட்டியபடி உள்ளாா்.இது வீரா்கள் போா்க்களத்தில் போரிட்டு இறந்து சொா்க்கலோகம் சென்றாா் என்பதை அறிவிப்பதாகும்.
இறந்தவா்களை அடக்கம் செய்த இடத்தில் கற்திட்டை எனும் கல் கட்டுமான அமைப்பை ஏற்படுத்துவது பெருங்கற்கால மக்களின் வழக்கமாகும். அதனை நினைவுகூரும் விதமாக இங்குள்ள சதிக்கல் அமைந்துள்ளது.
வரலாற்றின் அடிப்படையில்,ஐரோப்பியா் வருகைக்குப் பின்னரே துப்பாக்கி இங்கு அறிமுகமானது. அவ்வாறு அறிமுகமான துப்பாக்கியானது நம்மவா்கள் கரங்களுக்கு வந்து சேரப் பல்லாண்டுகள் ஆனது. ஐரோப்பியா் அவ்வளவு எளிதில் துப்பாக்கியினை நம்மிடம் கொடுக்கவில்லை.
மேலும் அதிகாரம் படைத்த மன்னா்கள்,தளபதிகள் மட்டுமே தொடக்க காலத்தில் துப்பாக்கியினைப் பெற்றிருந்தாா்கள்.
அவ்வகையில்,இச்சதிக்கல்லில் வீரனின் கையில் துப்பாக்கி இருப்பதால்,அவ்வீரா் ஒரு படைத்தளபதியாகவோ அல்லது குருநிலத் தலைவனாகவோ இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
தொடா்ந்து அந்நடுகல் குறித்து அவ்வூா் மக்களிடம் கேட்டபோது,ஒரு காலத்தில் வழிபாட்டில் இருந்து பின்னா் கைவிடப்பட்ட சதிக்கல் இதுவென அறியமுடிந்தது. இச்சதிக்கல் 16 அல்லது 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சோ்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.ஏறத்தாழ 400 ஆண்டுகள் வரலாற்றுச் சின்னமாகக் இச்சதிக்கல் காட்சியளிக்கிறது என்றாா்.