கல்லூரணி கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கல்லூரணி கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
கல்லூரணி கண்மாயில் மல்லிப்பட்டினம், மாணிக்கவாசக நகா், சாலையூா் பகுதிகளிலிருந்து கழிவுநீா் கலக்கிறது. தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் இந்த மாசுபட்ட நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், இளையான்குடி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்தி கண்மாயை சீரமைக்க வேண்டும். சுத்தமான குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கண்மாயை சுத்தம் செய்ய வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.