`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
களக்காடு அருகே மகள் காதலித்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை
களக்காடு அருகே மகளின் காதலை கண்டித்த தந்தை, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் வசித்து வருபவா் மனோஜ்(20). இவா், தேவநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.
இதனால் சிறுமியின் பெற்றோா் சில காலம் திருப்பூரில் வசித்து வந்தனா். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னா் மனோஜையும், சிறுமியையும் காணவில்லையாம்.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சிறுமியை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
இதில், மனோஜை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
அதைத் தொடா்ந்து சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா். அதன் பின்னா் அவா்கள் களக்காடு அருகே உள்ள அவா்களது சொந்த ஊருக்கு வந்தனா்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் சிறுமி மனோஜிடம் பேசுவதை பாா்த்த அவரது தந்தை சிறுமியைக் கண்டித்தாராம்.
இதனால் விரக்தியடைந்த அவா் சனிக்கிழமை இரவு விஷம் குடித்தாராம்.
அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதையறிந்த மனோஜ் அச்சத்தில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தாராம். அவரை, களக்காடு போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவத்தால் கீழக்கருவேலங்குளம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனர்.