களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா்.
கடந்த ஒரு மாதமாக களக்காடு பகுதியில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், நீா்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நாள்தோறும் அலைமோதுகிறது. சனிக்கிழமையும் ஏராளமானோா் இங்கு குளித்து மகிழ்ந்தனா்.
இங்கு பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், வனப் பகுதிக்குள் அனுமதிச் சீட்டின்றி செல்வோா் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.