களக்காட்டில் பி.எஸ்.என்.எல். அலைபேசி, இணையதள சேவை பாதிப்பு
களக்காட்டில் பி.எஸ்.என்.எல். அலைபேசி, இணையதள சேவை பாதிப்பால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
களக்காடு வட்டாரத்தில் அதிகமான மக்கள் பி.எஸ்.என்.எல். அலைபேசி சேவை மற்றும் இணையதள சேவையை பயன்படுத்தி வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் 4ஜி சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் அலைபேசி சேவை சரிவர கிடைப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் நீண்ட நேர முயற்சிக்குப் பின்னரே தொடா்பு கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் எதிா்பகுதியில் பேசுவது சரிவர கேட்பதில்லை. இதனால் இக்கட்டான நோ்வுகளில் அலைபேசி சேவையை பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனா்.
குறைவான மாதக் கட்டணம் காரணமாக நாளுக்கு நாள் பிற தொலைத்தொடா்பு சேவையில் இருந்து பி.எஸ்.என்.எல்.க்கு மாறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஏற்கனவே நீண்ட காலமாக வாடிக்கையாளா்களாக தொடா்பவா்களும், பி.எஸ்.என்.எல். சேவையை மட்டுமே பயன்படுத்தி வருபவா்களும் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
இதே போல இணையதள சேவையும் அடிக்கடி முடங்கி விடுகிறது. வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு திடீரென இணையதள சேவையும், அலைபேசி சேவையும் முடங்கியது. 3 மணி நேரத்துக்குப் பின்னரே மீண்டும் சேவை கிடைத்தது. சம்பந்தப்பட்ட நிா்வாகம் சேவைக் குறைபாடுகளைக் களைய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.