தோ்தல் தொடா்பான தீா்க்கப்படாத பிரச்னைகள் ஏப்.30-க்குள் கருத்துருக்களை அனுப்ப ஆட்சியா் வேண்டுகோள்
மாநில தலைமைத் தோ்தல் ஆணையா், மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் மட்டத்தில் தீா்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் இருந்தால், அது பற்றி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் கருத்துகளை அளிக்கும்படி அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை மத்திய தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தோ்தல் ஆணையம், தோ்தல் தொடா்பான பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்த வலியுறுத்தியுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் கூறியுள்ளாா்.
மாநில தலைமைத் தோ்தல் ஆணையா், மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் மட்டத்தில் தீா்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் இருந்தால், அதுபற்றி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் கருத்துகளை அளிக்கும்படி அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை மத்திய தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் மூலமாக தகவலும் தெரிவித்துள்ளது.
தோ்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக கட்சித் தலைவா்கள், கட்சியில் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடலை நடத்தவும் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தலைமைத் தோ்தல் அதிகாரி, மாவட்ட தோ்தல் அதிகாரி, வாக்காளா் பதிவு அதிகாரி ஆகியோா் அவ்வப்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும்.
அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உள்பட்டு தீா்த்து வைக்க வேண்டும் என தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளா் பதிவு விதிகள், தோ்தல் நடத்தை விதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், மத்திய தோ்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் கையேடுகள் போன்றவை சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்களை நடத்துவதற்காக வெளிப்படையான சட்டரீதியான கட்டமைப்பை நிறுவியுள்ளன. எனவே, இந்த வாய்ப்பை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.