கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரேஷன் பொருள்கள்; அரசுக்கு ரூ.69,000 கோடி இழப்பு - ICRIER அறிக்கை!
இந்தியாவின் பொது விநியோக அமைப்பு (Public Distribution System) மூலம் ஆண்டுக்கு 814 மில்லியன் மக்களுக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக 20 மில்லியன் டன் அரிசி, கோதுமை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்துக்காக கொண்டு செல்லப்படும் 28 சதவிகித தானியங்கள் மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு செய்த சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Research on International Economic Relations - ICRIER) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், ``குடும்ப நுகர்வுச் செலவு (Household Consumption Expenditure Survey - HCES) முறையிலும், ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India - FCI) மாதாந்திர புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் கணக்கெடுத்ததின்படி, தானியங்கள் தரையில் சிந்துதல், வெளிச் சந்தையில் விற்கப்படுதல் போன்ற காரணங்களுக்காக ஆண்டுக்கு 20 மில்லியன் டன் தானியங்கள் பயனர்களை சேர்வதில்லை. அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இந்தப் புகார்கள் அதிகமாக இருக்கிறது. இந்தப் புகாரின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்.
அதாவது, அந்த மாநிலத்தில் 33 சதவிகித தானியங்கள் மக்களுக்கு சென்று சேர்வதில்லை. அதற்கு அடுத்தடுத்த இடங்களில், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா மாநிலங்கள் இருக்கின்றன. இதனால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.69,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுவருகிறது. ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைத்ததன் மூலம் மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் கள்ளச்சந்தையில் தானியங்கள் விற்கப்படுவது தொடர்ந்து வருகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.