தமிழ் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சா் மா.சுப்பி...
கழிவறைக்குள் பேராசிரியர் மர்ம மரணம்; முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் சடலம் மீட்பு!
உ.பியைச் சேர்ந்தவர் பிரபாகர் குமார் (32). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் மதுரவாயலில் தங்கியிருந்தார். இவரின் குடும்பம் உ.பி-யில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 21.12.2024-ம் தேதி பிரபாகர் குமாரின் மனைவி அக்ஷனா என்பவர், கணவருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் பிரபாகர் குமாருடன் வேலை செய்யும் சோனி என்பவருக்கு அக்ஷனா தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சோனி என்பவர், பிரபாகர் குமார் குடியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது கதவு பூட்டியிருந்தது. இதையடுத்து சோனி, மதுரவாயல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது வீட்டின் மெயின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனால் வீட்டின் பின்பக்கம் வழியாக எட்டிபார்த்தபோது பால்கனி கதவு திறந்திருந்தது. அதனால் போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் உதவி பேராசிரியர் பிரபாகர் குமார் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.