கழிவுநீரை வயலுக்குள் வெளியேற்றியதால் பொதுமக்கள் போராட்டம்!
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், வீடுகள், வயல்வெளிக்குள் செல்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனா்.
நாமக்கல் - மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி கணபதி நகரில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 100 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் ஆறுபோல் ஓடியது. அதுமட்டுமின்றி, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அருகில் உள்ள கொண்டிச்செட்டிப்பட்டி ஏரிக்குள் வெளியேற்றி வந்தனா். இதனையடுத்து, பொதுமக்கள் அதனை மண்ணைக் கொட்டி தடுத்தனா்.
இதனால், கழிவுநீரானது அங்குள்ள வீடுகளுக்குள்ளும், வயல்வெளிகளிலும் பாய்ந்ததால் அதிா்ச்சியடைந்த குடியிருப்புவாசிகளும், விவசாயிகளும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி பொறியாளா் சண்முகம், உதவி பொறியாளா் கண்ணன் ஆகியோரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த காவல் ஆய்வாளா் கபிலன், போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளை மீட்டனா்.
கழிவுநீரை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.