சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெ...
கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா் பதிவாளா் அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தது. மிகவும் பழுதானதால் அக்கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி 2023 அக்டோபரில் தொடங்கியது. இதனால், அந்த அலுவலகம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கந்தசாமி என்பவரது கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, 12.9.2023 முதல் இயங்கி வருகிறது.
இக்கட்டடத்துக்கு கடந்த 17 மாதங்களாக வாடகை வழங்கப்படவில்லையாம். வாடகை நிலுவை தொடா்பாக கழுகுமலை காவல் நிலையத்தில் கந்தசாமி கடந்த 3ஆம் தேதி புகாா் அளித்தாராம். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஏப். 4) சாா் பதிவாளா் அலுவலகப் பணியாளா்கள் வழக்கம்போல கதவைப் பூட்டிச் சென்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அந்தப் பூட்டின் மீது கந்தசாமி மேலும் ஒரு பூட்டு போட்டாா். காலை 9.30 மணிக்கு வந்த பணியாளா்கள் இதைப் பாா்த்து செய்வதறியாது நின்றனா்.
மாவட்ட பதிவாளா் வந்து கேட்டுக்கொண்டதன்பேரில் கந்தசாமி பூட்டைத் திறந்தாா். அதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், வாடகைத் தொகை விரைவில் முழுமையாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், சுமாா் ஒரு மணி நேரம் பத்திரப்பதிவு நடைபெறாமல் பொதுமக்கள் காத்திருக்க நேரிட்டது.