கவுண்டம்பாளையத்தில் மரக்கடையில் தீ
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மரக்கடையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (46). இவா் கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியில் மரக்கடை நடத்தி வருகிறாா். இவரது மரக்கடையில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அவரது பக்கத்துக் கடைக்காரரான வினோத், சங்கமேஸ்வரனுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். அதற்குள் தீ அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் பரவியுள்ளது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் போலீஸாா், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த தீ விபத்தில் மரக்கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.