காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு வெளியே இன்று போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதையடுத்து, தில்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.