காங்கேயம்: சிவன் மலையில் கடல்நீரை வைத்து வழிபாடு - ஆண்டவன் உத்தரவு காரணம் என்ன?
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடிப் பேழை வழிபாடு உண்டு. அதாவது சிவன்மலை முருகன் கனவில் வந்து இன்ன பொருளை உத்தரவிட்டதாகக் கூறி, பக்தர்கள் தரும் சிறப்பு பூஜைப் பொருளை வழிபட்டு, பின்னர் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பேழையில் வைப்பது வழக்கம். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரையை சேர்ந்த பெண் பக்தர் பவானி என்பவரின் கனவில் வந்ததாக கடல்நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டது. முன்னதாக கண்ணாடிப் பேழைக்குள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் பிரம்பு மற்றும் சூடம் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு பக்தரின் கனவில் வந்த கடல்நீர் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த பூஜைப் பொருள் மற்றொரு பக்தரின் கனவில் வரும் வரை, கண்ணாடிப் பேழைக்குள் இந்த பொருளை பக்தர்கள் பார்த்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடல்நீரை அப்பகுதியில் உள்ள மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.