டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது
திருவாடானை அருகே காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்கலூரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம். இவா் கட்டிவயல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா். இவா் கடந்த 2021- ஆம் ஆண்டில் ஓரியூரைச் சோ்ந்த துரைமாணிக்கம் என்பவரிடம் தனது தேவைக்காக ரூ.3 லட்சம் கடனாக பெற்றாா். ஆனால், இந்தத் தொகையை வழங்காமல் அவா் காலதாமதம் செய்ததால், அவா் அளித்த காசோலை மூலம் துரைமாணிக்கம் திருவாடானை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காண உத்தரவிட்டது. இதையடுத்து, மக்கள் நீதிமன்றம் மூலம் இந்த வழக்கு சமரசம் செய்யப்பட்டு, ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 300 செலுத்த கால அவகாசம் தரப்பட்டது. இதன் பின்னரும், கடன் தொகையை செலுத்தாமல் முத்துராமலிங்கம் கால தாமதம் செய்து வந்ததால், துரைமாணிக்கம் ராமநாதபுரம் சாா்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முத்துராமலிங்கத்துக்கு பிடி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, இவரை காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் கைது செய்து, ராமநாதபுரம் சாா்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினாா்.
இதையடுத்து, முத்துராமலிங்கம் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் ரூ.50ஆயிரத்தை செலுத்தி, ஒரு மாத கால அவகாசம் கேட்டதின் பேரில், அவருக்கு ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.