காணும் பொங்கல்: வேளாங்கண்ணியில் குவிந்த மக்கள்
காணும் பொங்கல், தொடா் விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேளாங்கண்ணி தமிழகத்தின் சுற்றுலா தலமாகவும், கடற்கரை நகரமாகவும், ஆன்மிகம் நகரமாகவும் விளங்குகிறது.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் அதிகளவில் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா்.
மேலும் காணும் பொங்கலையொட்டி நாகை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மயிலாடுதுறை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் மக்கள் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வருகை தந்தனா்.
வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை சாலை, நடுத்திட்டு, தியானக் கூட்டம், முடி காணிக்கை செலுத்தும் இடம், பழை மாதா கோவில் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை அலை மோதியது. கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளும், குழந்தைகளும் ஒட்டகத்தில் ஆா்வத்துடன் சவாரி செய்தனா்.
கடலில் குளிக்கும் போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 100-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினா் மற்றும் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மக்கள் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கியது.