இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
காதலிக்க நேரமில்லை விமர்சனம்: நித்யா மேனன், ரவி மோகன், ஏ.ஆர்.ரஹ்மான்; நம்மை இழுக்கிறதா இந்த கூட்டணி?
2017-ம் ஆண்டு நடக்கும் கதையில் சென்னையில் ஆர்கிடெக்ட்டாக இருக்கும் ஷ்ரேயா (நித்யா மேனன்), பெங்களூரில் கட்டடக்கலை பொறியாளராக இருக்கும் சித்தார்த் (ரவி மோகன்) ஆகிய இருவருக்கும் தத்தமது காதல் வாழ்வில் பிரிவு ஏற்படுகிறது. ஷ்ரேயா குழந்தைப் பேறு வேண்டும் என்றும், சித்தார்த் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் நேரெதிர் எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார் ஷ்ரேயா. அதனால் வீட்டை விட்டு வெளியேறும் அவர், எதேச்சையாக சித்தார்த்தினை பெங்களூருவில் சந்திக்கிறார். இதன் பின்னர் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நவீன காதல் கதையாகச் சொல்லியிருப்பதே இந்த `காதலிக்க நேரமில்லை'.
காதலின் ஏமாற்றம், தைரியமான முடிவுகள், நேர்மையான கோபம் என வாழ்வை இயல்பான கண்ணோட்டத்தோடு அணுகுகிற நவீனக் காலத்துப் பெண்ணாக நித்யா மேனன் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிங்கிள் மதராக வருகிற இரண்டாம் பாதியில் கதையின் கருவுக்குத் தேவையான நடிப்பை அநாயாசமாக வழங்கி வலுவாக ஸ்கோர் செய்திருக்கிறார். 'இந்த உலகம் வாழத் தகுதியில்லை' எனப் பேசி காதலில் தோற்று, மன்மதனாக மாற்றம் அடையும் இடைவெளியை நடிப்பில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் ரவி மோகன். குறிப்பாக நித்யா மேனனுடன் கதைக்குத் தேவையான கெமிஸ்ட்ரியை அளவாகக் கொடுத்ததோடு, சிறுவன் பார்த்தீவுடன் உறவு பாராட்டும் காட்சிகளில் இயல்பான ஃபீல் குட் உணர்வைக் கொடுத்துள்ளார். பிரிந்துசென்ற காதலி திரும்ப வரும் இடத்தை அவர் தயக்கத்துடன் அணுகியதும் எதார்த்தமானதொரு நடிப்பு! சிறுவன் ரொஹான் சிங், வயதுக்குரிய குறும்புத்தனம், தந்தை இல்லாத வெறுமை, தேவையான அரவணைப்பு கிடைத்தவுடன் ஆனந்தம் எனச் சுட்டி பையனாக நடிப்பில் வெற்றிக்கான கோலினைப் பறக்கவிட்டுள்ளான்.
முன்னாள் காதலியாக மீண்டும் காதலைத் தொடங்க வருகிற இடத்தில் இருக்கும் தயக்கம், பழைய காதலின் எதிர்பார்ப்பு, நினைவுகளால் அடையும் ஏமாற்றம் எனச் சிறிய திரை நேரத்தைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார் டி.ஜெ.பானு. நித்யா மேனனுக்குத் துணையாக வரும் வினோதினி ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைத்தும், உணர்வுபூர்வமான இடங்களில் எமோஷன்களில் ஸ்கோர் செய்தும் வலு சேர்க்கிறார். நண்பராக வரும் யோகிபாபு தனது முகபாவனைகளால் சிரிக்க வைக்கிறார், இருந்தும் தன்பாலின ஈர்ப்பினரை கேலி செய்யும் விதத்தினைக் குறைத்திருக்கலாம். தன்பாலின ஈர்ப்பாளராக வினய் முக்கிய பாத்திரத்தில் வந்தாலும் பாதியில் காணாமல் போகிறார். அவரது கதாபாத்திரத்தை இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாமே?! லால், மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பிலும் குறையேதுமில்லை.
மென்மையான கலர் பேலட்டினை உயர்தரத்தில் கொடுத்து படத்துக்கான டோனை ரிச்சாக செட் செய்து படத்துக்குள் அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி. கட்டடங்கள், அறைகள், உணவகங்கள் என்று சுவருக்குள்ளே மட்டுமே கதை நகர்ந்தாலும் அதற்குள் தேர்ந்த கோணங்களைப் பிடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதற்குக் கூடுதல் வலு சேர்க்கும் விதமாகக் காட்சிகளைத் தொந்தரவு செய்யாத நேர்த்தியான எடிட்டிங் மூலம் தொழில்நுட்ப ரீதியாக பலம் சேர்த்துள்ளார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர். மாறுபட்ட காலக்கோட்டினை இணைத்த விதமும் அருமை. ‘என்னை இழு இழு இழுக்குதடி...’ எனப் பாடல்களால் ஏற்கெனவே ஈர்த்துவிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணி இசையிலும் ரொமான்ஸ் மாயாஜாலம் காட்டி நம்மைக் கட்டி இழுத்திருக்கிறார். மியூசிக்கல் டிராமா என்று சொல்லும் அளவுக்கு திசையங்கும் இசையால் மந்திரம் போட்டிருக்கிறார். ஆங்காங்கே ஒலிக்கும் ஆங்கிலப் பாடல்கள், கிளாஸிக்கல் பின்னணி இசை, 'இழுக்குதடி' பாடலை ஆங்காங்கே பயன்படுத்திய விதம் என இசைப் பிரியர்களுக்கு டபுள் போனஸ்! கதைக்குத் தேவையான எலைட் தன்மைக்கு ஏற்ற வகையில் கலை இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் ஷண்முக ராஜா.
நாயகன் - நாயகி இருவரின் காதல் குறித்த பார்வையும், வாழ்வு குறித்து அவர்களுக்கு இருக்கும் மாறுபட்ட சிந்தனைகளையும் விளக்கி படம் தொடங்குகிறது. குழந்தைப் பேறு குறித்த நாயகனின் பார்வையும், அதனால் தடைப்படும் திருமணமும் காட்சிகளாகச் சற்றே ஒட்டாத உணர்வு! அதே நேரம் நித்யா மேனன் எடுக்கும் முடிவுகள், நாயகனும் நாயகியும் சந்திக்கும் முதல் புள்ளி ஆகியவை நன்றாகவே க்ளிக் ஆகியிருக்கின்றன. ஒரு டிராமாவுக்குத் தேவையான வேகத்தில் செல்லும் திரைமொழியில், மையபாத்திரங்களின் சிந்தனைகளை எந்த மேற்பூச்சும் இல்லாமல் தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. சிறிது விலகினாலும் பிற்போக்கு கருத்தினைச் சொல்லிவிடும் இடங்கள் இருந்தாலும் அவை கவனத்துடன் கையாளப்பட்டது பாராட்டத்தக்கது.
இரண்டாம் பாதி தொடங்கியதும் சிறுவன், நித்யா மேனன், ரவி மோகன் என்று மூவரைச் சுற்றியும் விரியும் காட்சிகள் எந்த இடத்திலும் சலிப்பைத் தராமல் நகர்கின்றன. குறிப்பாகச் சிறுவனுக்கும் ரவி மோகனுக்குமான இடங்கள் அவர்கள் இருவரையும் நாம் 'காதலிக்க நேரமுண்டு' என்ற எண்ணத்தைத் தருகின்றன. ஒரு வகையில் இது மாடர்ன் 'ரிதமோ' என்ற எண்ணமும் எட்டிப்பார்க்கிறது. அதே சமயம் திரும்ப வரும் பழைய காதலி, அதன் பின்னான அந்த டிராமா, ஒரு இடத்தில் முடிந்துவிட்ட படத்துக்கு மீண்டும் மீண்டும் க்ளைமாக்ஸ் வருவது போன்றவை மைனஸ்! ஒரு சில இடங்களில் தன்பாலின ஈர்ப்பு குறித்த கேலிகள் இருந்தாலும் தன்பாலின திருமணத்தைக் காட்சிப்படுத்தியதற்காகவே பாராட்டுகள் கிருத்திகா! மேலும் உறவுகளுக்கு இடையேயான அன்பைப் பற்றிப் பேசும் படத்தில், அதற்கு சமூகம் கற்பித்திருக்கும் 'புனிதத்தன்மையை' காக்கும் வாய்ப்புகள் இருந்தும் அதைக் கதையின் போக்கிலேயே வெளிப்படையாகவிட்டுவிட்ட அந்த முடிவு சிறப்பு!
சமூக கட்டமைப்புகளுக்குப் பயப்படாமல் நாம் நாமாக இருந்து அன்பைப் பரிமாறிக்கொள்ளலாம் என்ற காதல் மொழியை, வசீகரிக்கும் திரைமொழியுடனும் இசைமொழியுடனும் கொடுத்திருக்கும் இந்த ‘காதலிக்க நேரமில்லை’க்கு நிச்சயமாக உங்கள் நேரத்தைக் கொடுக்கலாம்.