2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
காப்பகத்தில் திடீர் ஆய்வு; நலம் விசாரித்த முதல்வர்... `அப்பா' என அழைத்து நெகிழ வைத்த மாணவர்கள்!
விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக மாலையில், சூலக்கரை மேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு காப்பகம் மற்றும் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், கல்வி கற்பதில் அவர்களுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் இனிப்புகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். அப்போது பேசிய மாணவி ஒருவர், "மற்றவர்கள் உங்களை சந்திப்பது போல, நாங்கள் எல்லோரும் முதலமைச்சரை பார்ப்போமா என்று சந்தேகமடைந்தோம். நாங்கள் நினைத்த சமயத்தில் எங்கள் காப்பகத்திற்கு நேரடியாக வந்து எல்லோரையும் சந்தித்தது மிகுந்த மன மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை வந்து சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இனிப்புகள் வாங்கி கொடுத்து பரிசளித்துள்ளீர்கள். இதுமாதிரி பெற்றோர்கள் தான் எங்களுக்கு செய்ததுண்டு. இப்போது நீங்கள் செய்வதை பார்க்கையில் அவர்களை நினைவுபடுத்த தூண்டுகிறது" என்றார்.
மாணவியின் இந்த நெகிழ்ச்சியான பேச்சையடுத்து சக மாணவர்கள் அனைவரும் அவரை உற்சாகப்படுத்த கைத்தட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆய்வை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பும்போது, மாணவ-மாணவிகள் அனைவரும் ஒருமித்த குரலில் 'Bye அப்பா' என முதலமைச்சரை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காப்பகத்தில் நடந்த இந்த தருணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் 'அப்பா.. நிறைவான நாள்' என குறிப்பிட்டு வீடியோவுடன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.