மாநிலங்களுக்கான வரி பகிா்வில் பாரபட்சம்: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா்
காலிறுதியில் லக்ஷயா; போராடி வீழ்ந்த சிந்து
சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து அதற்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.
2-ஆவது சுற்றில், ஆடவா் ஒற்றையரில் லக்ஷயா சென் 21-16, 21-18 என்ற நோ் கேம்களில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை தோற்கடித்து காலிறுதிக்கு வந்தாா்.
அதேபோல், ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை 21-19, 21-15 என்ற கேம்களில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் ஜோ்/ஃப்ரெடெரிக் சோகாா்ட் கூட்டணியை சாய்த்தது.
எனினும், மகளிா் ஒற்றையரில், சிந்து 16-21, 21-17, 21-23 என்ற கேம்களில், சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் போராடித் தோற்றாா். அனுபமா உபாத்யாயவும் 7-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் நட்சுகி நிடாய்ராவால் வெளியேற்றப்பட்டாா்.
மாளவிகா பன்சோதும் 9-21, 9-21 என்ற கணக்கில், 8-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கிடம் மோசமான தோல்வி கண்டாா்.
மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 11-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லியு ஷெங் ஷு/டான் நிங் இணையிடம் தோற்றது.
கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி இணை காயம் காரணமாக, 2-ஆவது சுற்றிலிருந்து விலகி போட்டியிலிருந்து வெளியேறியது.