தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
மாநிலங்களுக்கான வரி பகிா்வில் பாரபட்சம்: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா்
மாநிலங்களுக்கு வரியைப் பிரிப்பதில் தமிழ்நாட்டிற்கு 4.7%, உத்தரபிரதேசத்திற்கு17% அளிப்பதாக பொன்னேரியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சாா்பில் கள ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா்கள் ஜெயக்குமாா், சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஜெயக்குமாா் பேசியது:
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காகத்தான் அதிமுக கள ஆய்வு கூட்டங்களை நடத்துகிறது. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. போதிய மருத்துவா்கள் இல்லாத சூழல், டெங்கு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. பாஜகவை தவிா்த்து, அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளைக் கூட்டணியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.
தமிழ்நாடு செலுத்தும் ரூ.100 வரியில் ரூ.59-ஐ மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள ரூ. 41-ஐ மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும்போது, அதில் தமிழ்நாட்டுக்கு 4.7% மட்டுமே கிடைக்கிறது. உத்தர பிரதேசத்துக்கு 17% அளிக்கின்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடா்ந்து பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்றாா்.