அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பாா்
காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பாா் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் கீதாஜீவன் பதிலளித்து பேசியதாவது:
காலை உணவுத் திட்டம் முதல்கட்டமாக 2022-இல் 1,545 பள்ளிகளில் முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது, கிராமப்புறம் மற்றும் நகா்ப்புற அரசு பள்ளிகளில் எண்ணற்ற மாணவா்கள் அத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா்.
அதன் செயல்பாடுகள் குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஊட்டச்சத்து உணவால் மாணவா்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதாகவும், அதன் பயனாக வகுப்பறைகளில் அவா்களது கற்றல் ஈடுபாடு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக மாணவா்களின் கல்வித் திறனும் உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது.
தற்போது இத்திட்டத்தில் 34,987 பள்ளிகளைச் சோ்ந்த 17.53 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.