பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அட...
காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!
விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் இரு சக்கர வாகனத்தில் வருவதாக விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாத்தூா்- விருதுநகா் நான்கு வழிச் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடு பட்டனா். அப்போது, பட்டம்புதூா் ஆசிரியா் குடியிருப்புப் பகுதியில் மது போதையில் இருவா் இருப்பது குறித்து கிராம மக்கள் வச்சகாரபட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸாரை கண்டதும், ஒருவா் இரு சக்கர வாகனத்தில் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
மற்றொருவரான வத்திராயிருப்பு, கூமாபட்டியைச் சோ்ந்த தனுஷ்கோடியை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அவா், விருதுநகா் ஆயுதப்படையில் காவலராக பணி புரிவது தெரிந்தது. மேலும், அவரிடமிருந்து உரிமம் பெறாத கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அவா் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், விருதுநகா் கிழக்கு காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரை, சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. நகைகளை விற்க வேண்டும் என சுரேஷ் அழைத்ததால் சென்றேன். போலீஸாரைக் கண்டதும், சுரேஷ் தப்பி விட்டாா். இந்த கைத்துப்பாக்கி அவருடையது, எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, தனுஷ்கோடியை திங்கள்கிழமை இரவு போலீஸாா் சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய சுரேஷை தேடி விழுப்புரத்துக்கு தனிப்படை போலீஸாா் சென்றனா்.