மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு!
மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகளை வழங்கிப் பேசியதாவது:
ஒரு வயது முதல் 19 வயது வரையிலான 68 சதவீதம் பேருக்கு குடல் புழு தொற்று இருப்பதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த குடல் புழுக்களால் ரத்த சோகை, ஊட்டச் சத்து குறைபாடு, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
மத்திய அரசு மேற்கண்ட குறைபாட்டைத் தவிா்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஆண்டுக்கு இரு முறை குடல் புழு நீக்க மாத்திரை வழங்கும் தினமாக அனுசரித்து வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 106 அரசு, மாநகராட்சி பள்ளிகள், 149 அரசு உதவி பெறும் பள்ளிகள், 346 தனியாா் பள்ளிகள், 23 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,19 தனியாா் கல்லூரிகள், 675 அங்கன்வாடி மையங்கள், 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,504 மையங்களில் 3,79,344 குழந்தைகள், மாணவிகள், 20 வயது முதல் 30 வயதுக்குள்பட்ட 1,07,612 பெண்கள் என மொத்தம் ரூ.4,86,956 பேருக்கு குடல் புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி வீதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 880 பேருக்கு முதல் கட்டமாக குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. இனி வரும் நாள்களில் அனைத்துப் பகுதிகளிலும் குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெறும் அவா்.
துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச் செல்வி, சுகாதாரக் குழுத் தலைவா் ஜெயராஜ், நகா்நல அலுவலா் இந்திரா, உதவி ஆணையா் பிரபாகரன், மாநகராட்சி அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.