காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது
தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா், கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளப்பட்டி அருகே பாலம் அமைக்கும் பணியில் காவலாளியாக வேலைபாா்த்து வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வெள்ளப்பட்டி பாலத்தின் கீழ் அவா், நண்பா் ஒருவருடன் சோ்ந்து மது அருந்தியபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த அவரது நண்பா், அவரை கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.
விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி வட்டம், முத்தரையா் நகரைச் சோ்ந்த உமையணன் என்ற காக்கையன் மகன் மதுரை வீரன் (44), சந்திரனை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.