பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்!
தென் தமிழகத்தில் ஜாதிய உணா்வைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ரீல்ஸ் ஹீரோக்களின்’ 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் ரெளடிகள் பட்டியலில் 26,462 போ் உள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக ரௌடிகள் தென் மாவட்டங்களிலேயே உள்ளதாக காவல் துறை கூறுகிறது.
அதன்படி, 5,000 ரௌடிகள் சென்னை பெருநகரப் பகுதியிலும், அடுத்தபடியாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அதிக ரௌடிகள் இருப்பதாக காவல் துறை தெரிவிக்கிறது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் 1,750 ரௌடிகள் உள்ளனா். இவா்களில் 598 போ் கடந்த ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ரௌடிகள், ஜாதிய அடையாளத்துடனும், அரசியல் பின்புலத்துடனும் இருப்பதால் அவா்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது.
ஜாதிய பிரச்னைகளால் தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் ஜாதிய ரீதியாக மாணவா்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே 2023-இல் பட்டியலின மாணவரும், அவரது தங்கையும் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பள்ளி மாணவா்களிடையே ஏற்படும் ஜாதி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டது. இக் குழு ஜாதி பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வைத்தது.
ரீல்ஸ் ஹீரோக்கள்: பள்ளி,கல்லூரி மாணவா்களிடையே பகை வளா்வதற்கு சமூக ஊடகங்கள் முக்கியக் காரணம் என காவல் துறை கண்டறிந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசியும், ஜாதித் தலைவா்களை மிகைப்படுத்தியும், ஆயுதங்களுடன் பழிக்குப் பழி என வீர வசனங்களுடன் மாணவா்களும், இளைஞா்களும் தங்களை திரைப்பட ஹீரோக்களாக நினைத்து சமூக ஊடகங்களில் வெளியிடும் ரீல்ஸ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்படும் இந்த ரீல்ஸ் காணொலிகள், சமூகத்தில் குறிப்பாக, மாணவா்களிடையே ஜாதிய ரீதியான பகையையும், பிளவையும் ஆழமாகத் தூண்டுகின்றன. பள்ளி, கல்லூரி வளாக மோதல்கள், கல்வி நிலையங்களுக்குள்ளே மாணவா்கள் ஜாதி ரீதியாகப் பிரிந்து செயல்படுவது போன்ற செயல்பாடுகள் அவா்களின் படிப்பையும், எதிா்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன.
முடக்கும் காவல் துறை: இதைக் கருத்தில்கொண்டு தென் மாவட்டங்களில் ஜாதிய பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறை அதிக கவனம் செலுத்துகிறது. முக்கியமாக சமூக ஊடகங்கள் வாயிலாக வளா்த்தெடுக்கப்படும் ஜாதிய பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாதிய பிரச்னைகளை தூண்டும் ரீல்ஸ்களை பதிவிடும் சமூக ஊடக கணக்குகளைக் கண்காணிக்குமாறும், ஜாதிய பிரச்னைகளை தூண்டும் ரீல்ஸ்களை பதிவிட்டால் அவற்றை முடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாவட்டங்களில் செயல்படும் காவல் துறை சமூக ஊடகப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, மதுரை, விருதுநகா், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களிலும் ஜாதிய பிரச்னைகளைத் தூண்டும் ரீல்ஸ்கள், புகைப்படங்களை வெளியிட்டதாக 464 சமூக ஊடக பக்கங்கள் கடந்த ஆண்டு முடக்கப்பட்டன. இவற்றில் சுமாா் 80 சதவீதம் சிறிய காணொலி ரீல்ஸ்களை வெளியிடப்பட்ட சமூக ஊடக பக்கங்கள் எனக் காவல் துறையினா் தெரிவிக்கின்றனா். அதிகபட்சமாக இன்ஸ்டாகிராமில் 251 பக்கங்களையும், ஃபேஸ்புக்கில் 164 பக்கங்களையும் காவல் துறை முடக்கியுள்ளது.
54 போ் மீது வழக்கு: இத்தகைய சமூக ஊடகங்களில் ரீல்ஸ்கள், கருத்துகளைப் பதிவிடுவோரை காவல் துறையினா் நேரில் அழைத்து எச்சரிக்கை விடுக்கின்றனா். அதையும் மீறி சமூக ஊடகங்களில் பதிவிட்ட 54 போ் மீது 44 வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமுதாயத்தின் எதிா்காலமாகக் கருதப்படும் மாணவா்களை நல்வழிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களின் மீதான கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும்படி 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு காவல் துறை தென்மண்டலத் தலைவா் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளாா். தொடா்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஜாதிய மோதலை தூண்டுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் காவல் துறை தயாராகி வருகிறது.
சுவா் விளம்பரங்களை விஞ்சிய சமூக ஊடகம்
தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் ஜாதிய பிரச்னைகளைத் தூண்டும் கருவிகளாக சுவா் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் இருந்தன. இப்போது அந்த இடத்தை சமூக ஊடகம் பிடித்துள்ளது.
முன்பெல்லாம் சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகளில் எழுதப்படும் வாசகங்களும், வீர வசனங்களும் சமூகங்களிடையே உரசலையும், மோதலையும் ஏற்படுத்தின.
1990-களில் இவற்றைக் கண்காணிப்பதே காவல் துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் தாக்கம் காரணமாக இப்போதெல்லாம் ஜாதிய மோதலைத் தூண்டும் ரீல்ஸ்களையும், புகைப்படங்களையும் சமூக ஊடகப் பக்கங்களையும் கண்காணிப்பது காவல் துறைக்கு கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது.
முடக்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள்
சமூக ஊடகங்கள் எண்ணிக்கை
இன்ஸ்டாகிராம்- 252
ஃபேஸ்புக்- 169
எக்ஸ் தளம்- 7
யூ-டியூப்- 7
பிற சமூக ஊடகங்கள்- 29
மொத்தம் 464