காா்த்திகை முதல்நாள்: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்
திருப்பூரில் காா்த்திகை முதல்நாளை ஒட்டி ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களில் பெரும்பாலானவா்கள் காா்த்திகை முதல்நாளில் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்குவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டும் காா்த்திகை முதல்நாளான சனிக்கிழமை மாநகரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் குருசாமிகளின் தலைமையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடை திறக்கும் முன்பாகவே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பின்னா் நடை திறக்கப்பட்டதும் குருசாமிகளின் தலைமையில் மாலைகள் அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினா்.