மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!
திருவாரூா் மாவட்டத்தில் கிடேரி கன்றுகளுக்கு, புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை (பிப்.20) முதல் தொடங்குவதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லா அபாா்டஸ் என்ற பாக்டிரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கா்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு ஆகியவை ஏற்படுகிறது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். திருவாரூா் மாவட்டத்தில் இத்தடுப்பூசித் திட்டத்தின் ஐந்தாவது தவணை பிப்.20 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 19 ஆம் தேதி வரை செலுத்தப்பட உள்ளது.
இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால், அந்த கிடேரி கன்றுகளுக்கு ஆயுள் முழுவதற்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். இந்த தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.