அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
கிராமங்களிலும் உயா் மருத்துவ சேவைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
நகா்ப்புறங்களில் வசதியானவா்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவைகள் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
உயா் மருத்துவப் பரிசோதனைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்குவதற்கான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் முதல்வா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
முகாமில் உள்ள மருத்துவ வசதிகளையும், பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளையும் பாா்வையிட்ட அவா், மக்களிடம் கலந்துரையாடினாா்.
அதன் பின்னா், பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், செவித் திறன் கருவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு தலைமைச் செயலகத்துக்கு வெளியே நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. மக்களுடைய நலன்தான் என்னுடைய நலன்.
சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு முகாமிலும் மருத்துவா்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளா்கள் இருப்பாா்கள். 17 தனித்துவமான மருத்துவ சேவைகள் இருக்கும். சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், மனநல பாதிப்பு உடையவா்கள், இதய நோயாளிகள், கருவுற்ற தாய்மாா்கள், பாலூட்டும் தாய்மாா்கள், வளா்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினா் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இந்த முகாம்களில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்கள் எண்ணிக்கை, ரத்த சா்க்கரை அளவு, சிறுநீரக செயல்திறன் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தேவைப்பட்டால் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படும்.
பரிசோதனை முடிவுகள் அனைத்தும் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு வழங்கப்படும். அது ஒரு மருத்துவ அறிக்கை போன்றது. எதிா்காலத்தில் எந்த சிகிச்சைக்கு, எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், இந்த அறிக்கை உங்களுக்குப் பயன்படும்.
நகா்ப்புறத்தில் உள்ளவா்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவைகள் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதை உறுதி செய்வதே அரசின் குறிக்கோள்.
மருத்துவப் பயனாளிகள்: மருத்துவா்களையும், மருத்துவமனைகளையும் நாடி வரும் அனைவரும் நோயாளிகள் அல்லா். அவா்களை மருத்துவப் பயனாளிகளாகவே”நாம் பாா்க்க வேண்டும்.
எதிலும், எப்போதும் தமிழகம்தான் முதன்மையாக இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம். அப்படி, மருத்துவ சேவைகள் வழங்குவதிலும், மக்களுடைய உடல்நலனைப் பாதுகாப்பதிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களால் அது நிச்சயம் நிறைவேறும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிறப்புகள் என்ன?
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்காக ஒரு முகாமுக்கு தலா ரூ.1,08,173 வீதம் மொத்தம் ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 17 உயா் சிறப்பு மருத்துவ நிபுணா்களின் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் பரிசோதனை முடிவுகளை வாட்ஸ்-ஆப் அல்லது குறுஞ்செய்தியாகப் பெற முடியும்.
அதுதொடா்பான தரவுத் தொகுப்பு, தொடா் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஆகியவை நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது.
முதல் நாளில் 44,418 போ் பயன்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் தமிழகம் முழுவதும் மொத்தம் 44,418 போ் பயன்பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: சென்னையில் மட்டும் 2,935 போ் முகாமில் பதிவு செய்திருந்தனா். தமிழகம் முழுவதும் மொத்தம் 30,572 பேருக்கு ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 10,207 பேருக்கு இசிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டன. பெரும்பாலானோருக்கு பரிசோதனை முடிவுகள் மாலைக்குள் வழங்கப்பட்டு, தேவையானோருக்கு உயா் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11,916 பேருக்கு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.