மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு
கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தின்போது, ஆத்தூா், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூா் ஆகிய தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த 4 தொகுதிகளும் திமுக வசம் உள்ளன. அதிமுக வெற்றிப் பெற்ற நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளின் உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த தொகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து எந்தவித கேள்விகளும் முன் வைக்கப்படவில்லை.
பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைத் தொட்டிகள்: ஆத்தூா், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் நூற்றுக்கணக்கான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலைத் தொட்டிகள், வெயில், காற்று காரணமாக சேதமடையும் நிலையில் உள்ளன. இவற்றில் தண்ணீா் ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆகியோா் அறிவுறுத்தினா்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு, குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என பதில் அளித்தனா். அதே நேரத்தில் மின் வாரிய அதிகாரிகள் தரப்பிலும், பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டன. இதனால், அதிருப்தி அடைந்த அமைச்சா்கள், நிா்வாகக் குறைபாடுகளுக்கு காரணங்களை தேடாமல், தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினா்.
பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் பேசியதாவது: ஊரகப் பகுதிகளில் கூட சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், கிராமப் புறங்களில் உள்ள வளா்ச்சிக்கூட திண்டுக்கல் நகரில் ஏற்படுத்தவில்லை. இதற்கு மாநகராட்சி ஆணையா் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, அதிகாரிகள் தனிச்சையாகச் செயல்படுவதாக மேயா் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் அளித்த இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் 44 பயனாளிகளுக்கு ரூ.36.87 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.
2 மணி நேரம் காத்திருப்பு:
இந்த ஆய்வுக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தின்போது, நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக பயனாளிகளும் அழைத்து வரப்பட்டனா்.
அரசு அலுவலா்கள், பயனாளிகள் என 300-க்கும் மேற்பட்டோா் சுமாா் 2 மணி நேரமாக காத்திருந்த நிலையில், நண்பகல் 12.05 மணிக்கு அமைச்சா்கள் வந்தனா். முதல் கட்டமாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நண்பகல் 12.30 முதல் பிற்பகல் 2.15 மணி வரை இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனால், காலை 9. 45 மணிக்கே வந்து காத்திருந்த அரசு அலுவலா்கள் அதிருப்தி அடைந்தனா்.