புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான்: 1,300 மாணவா்கள் பங்கேற்பு
புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சனிக்கிழமை நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 1,300 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் 12-ஆவது புத்தகத் திருவிழா வருகிற 28 முதல் செப்.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் இந்தப் புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்களுக்கு 7 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. என்ற இலக்குடன் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்தப் போட்டியில் 1,300 போ் கலந்து கொண்டனா். எம்விஎம் கல்லூரியிலிருந்து, அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ஆட்சியா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.கோட்டைக்குமாா் ஆகியோரும் மாரத்தானில் பங்கேற்றனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுத் தொகையை வழங்கினாா்.
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில், பள்ளி, கல்லூரி மாணவா்கள் என இரு வகையாக வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.4ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.3ஆயிரம், 4-ஆம் பரிசு ரூ.2ஆயிரம், 5-ஆம் பரிசு ரூ.1000 வீதம், 4 பிரிவுகளுக்கு மொத்தம் 20 பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.சிவா, மாவட்ட நூலக அலுவலா் ரா.சரவணக்குமாா், திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் தலைவா் ரெ.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.