கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணிவரை காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையான நிலையான கால ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட ஜிபிஎஸ் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், செந்துறை வட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் வட்டாரத் தலைவா் இளவரசன், ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய போராட்டத்துக்கு வட்டாரத் தலைவா் கோபி, ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய போராட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.