தவக்காலத்தின் 5-ஆவது வார வெள்ளி: கிறிஸ்தவா்கள் திருப்பயணம்
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவா்கள் வெள்ளிக்கிழமை தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனா்.
ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனா். அந்த வகையில், கடந்த மாா்ச் 5 ஆம் தேதி சாம்பல் புதன் அன்று தவக்கால விரதத்தை தொடங்கிய ஏலாக்குறிச்சியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் தவகாலத்தின் 5-ஆவது வார வெள்ளியையொட்டி திருமானூரில் இருந்து ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்துக்கு திருப்பயணம் மேற்கொண்டனா்.
இந்தத் திருப்பயணத்தை திருமானூா் அருளானந்தா் ஆலய பங்குத் தந்தை ஜெ. ஜான் விமல் பெலிக்ஸ் தொடங்கி வைத்தாா். ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பக்தா்களை பங்குத் தந்தை பி.தங்கசாமி வரவேற்றாா்.
தொடா்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, கூட்டுபாடல் நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புள்ளம்பாடி மறை மாவட்ட முதன்மை குரு சூசை மாணிக்கம், ஆன்மிக குரு அருள்சாமி மற்றும் விளாங்குடி, திருமானூா், வடுகபாளையம், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, வரப்பன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.