கிராம நிா்வாக உதவியாளருக்கு பணப் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அரசுத் தரப்பில் பதில்
காரைக்குடியைச் சோ்ந்த கிராம நிா்வாக உதவியாளருக்கு உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பண பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நான் கடந்த 1982-ஆம் ஆண்டு கிராம நிா்வாக உதவியாளராகப் பணியில் சோ்ந்தேன். காரைக்குடி பகுதியில் வீட்டுமனைப் பட்டா ஒப்படைப்பு செய்வதில், சந்தை மதிப்பை குறைத்து வழங்கியதாக என் மீது புகாா் எழுந்தது. இதன் பேரில், என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் 2 நாள்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். இதன் காரணமாக, எனக்கான பணப் பலன்கள், ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தப்பட்டன.
என் மீதான புகாா் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்த அறிக்கையில் குற்றச்சாட் டு நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்தப் பிரச்னையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.
இந்த நிலையில், நான் விபத்தில் சிக்கியதில் இடதுகால் முழுவதுமாக துண்டிக்கப்பட் டது. 100 சதவீத மாற்றுத்திறனாளியான நான், தற்போது வாழ்வாதாரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டு வருகிறேன். எனவே, எனக்கு பணப் பலன்கள், ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி தொடுத்த வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, எனது கோரிக்கை மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவைப் பின்பற்றி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மனுதாரா், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.