ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரையில் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. கீழவாசல் தூய மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டைத் தொடா்ந்து, ஏசு சொரூபம் ஊா்வமாகக் கொண்டு வரப்பட்டு குடிலில் வைக்கப்பட்டது.
இதையடுத்து, நள்ளிரவில் தொடங்கிய வழிபாடு புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. மேலும், நரிமேடு சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயம், பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள பரிசுத்த மீட்பா் தேவாலயம், ஞானஒளிவுபுரம் புனித வளனாா் தேவாலயம், நேதாஜி சாலை புனித ஜாா்ஜ் தேவாலயம், திருப்பரங்குன்றம் சாலை புனித இமானுவேல் தேவாலயம், டவுன்ஹால் சாலை புனித ஜபமாலை அன்னை தேவாலயம், பழங்காநத்தம் புனித அந்தோணியாா் ஆலயம், கோ.புதூா் லூா்தன்னை ஆலயம், சிஎஸ்ஐ தேவாலயம், வாடிப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா்கள் தேவாலயங்களில் குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கினா். தேவாலயங்களின் வாயில்களில் காத்திருந்தோருக்கு புத்தாடை, உணவு உள்ளிட்டவை தானமாகவும் வழங்கப்பட்டன.
கிறிஸ்தவா்கள் புதன்கிழமை காலை புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் பண்டிகையைக் கொண்டாடினா். நண்பா்கள், உறவினா்களுக்கு இனிப்புகள் வழங்கினா். கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டையொட்டி, மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.