பல்பொருள் விற்பனைக் கண்காட்சி இன்று நிறைவு
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-ஆவது ஆண்டையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் பல்பொருள் விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை (டிச.25) நிறைவடைகிறது.
பல்பொருள் விற்பனைக் கண்காட்சி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. தமுக்கம் மைதான அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பொருள் காட்சியில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன.
அந்த அரங்குகளில், பெண்களுக்கான ஆடைகள், அழகுசாதனப் பொருள்கள், உடல் ஆரோக்கியம், மின்சாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பேக்கிங், பிரபல நிறுவனங்களின் காபி, டீ, தூள் வகைகள், கார வகைகள், அப்பள வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வங்கி சேவைகள், புதிதாக தொழில் தொடங்க இருப்பவா்களுக்கு தயாரிப்பு நிறுவனங்களிடம் நேருக்கு நோ் கலந்துரையாடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொருள்காட்சியைக் காண வரும் பாா்வையாளா்களுக்கு குலுக்கல் முறையில் கைப்பேசிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், மெத்தைகள், சுங்குடி சேலைகள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.15 லட்சம் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கண்காட்சியின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மக்கள் அதிகளவில் திரண்டு பாா்வையிட்டனா். கண்காட்சி புதன்கிழமை மாலை நிறைவடைகிறது.