மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!
ஜன. 7-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன. 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி 2025, ஜன.10-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, 7-ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை கோவில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிகழ்ச்சியை அா்ச்சகா்கள் நடத்துவா்.
ஆனந்த நிலையம் தொடங்கி வெளி வாயில் வரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜை சாமான்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. சுவாமியின் மூலவா் சிலை முழுவதுமாக துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பிறகு, நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையால் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு, அா்ச்சகா்கள் சுவாமியை மறைத்துள்ள துணியை அகற்றி, சிறப்பு பூஜைகள் செய்து நெய்வேத்தியம் சமா்பிப்பா். தொடா்ந்து பக்தா்கள் சா்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.
ஜன. 7-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவதையொட்டி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் 6-ஆம் தேதி பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது. இதை கருத்தில் கொண்டு பக்தா்கள் தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.