மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!
ஜன. 9-இல் வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்கள் விநியோகம்
திருப்பதி, திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் வரும் ஜன. 9-ஆம் தேதி காலை 5 மணிக்கு வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் 8 பகுதிகளில் கவுன்ட்டா்களை அமைத்துள்ளது. அக்கவுண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா செளத்திரி இணைந்து ஆய்வு செய்தனா்.
அதன் பிறகு அவா்கள் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக திருப்பதி மற்றும் திருமலையில் சா்வதரிசன டோக்கன்கள் ஜன. 10 முதல் 19 வரை வழங்கப்படும்.
ஜனவரி 10, 11, 12 ஆகிய முதல் மூன்று நாள்களுக்கு ஜன. 9-ஆம் தேதி காலை 5 மணி முதல் 1.20 லட்சம் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், அதைத்தொடா்ந்து வரும் நாள்களுக்கு முந்தைய நாள் டோக்கன்கள் வழங்கப்படும்.
திருப்பதியில், ராமச்சந்திர புஷ்கரணி, பூதேவி வளாகம், ஜீவகோனா மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மைதானம், சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பைராகிப்பட்டிடாவில் உள்ள ராமா நாயுடு பள்ளி, எம்.ஆா். பள்ளிப் பள்ளிகளுடன், திருமலையில் உள்ள பாலாஜி நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருமலை உள்ளூா் மக்களுக்காக கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுன்ட்டா்களும், திருமலையில் 4 கவுன்ட்டா்களும் என மொத்தம் 91 கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் தங்களின் ஆதாா் அட்டையை காண்பித்து டோக்கன் பெற வேண்டும். இம்முறை டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு அவா்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய சீட்டு வழங்கப்படும்.
இந்த 10 நாள்களில் டோக்கன் இல்லாத பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
கவுன்ட்டா்கள் அமைக்கப்படும் பகுதிகளில் சிறப்பு வரிசைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காத்திருக்கும் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதி செய்து தரப்படுகிறது. சா்வதரிசன டோக்கன்களுடன் பக்தா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும்.
ஆய்வில், தேவஸ்தான அதிகாரிகள், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.