OLA: தங்கத்தில் ஸ்கூட்டர்; வாங்க முடியாது; ஜெயிச்சுக்கலாம்; என்ன போட்டி வைக்கப்போகுது ஓலா?
எல்டொராடோ என்று ஒரு தங்க நகரம் இருந்தது என நாம் பல கதைகள் கேட்டிருப்போம்.ஒருவேளை எல்டொராடோவில் ஒரு எலெக்ட்ரிக் வாகனம் இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும்?
நினைத்துப் பார்க்கையில் கற்பனையிலேயே கண்கள் கூசுகின்றன.இப்படி ஒரு வாகனத்தை நாம் நிஜ வாழ்க்கையில் பார்ப்பது சாத்தியமாகுமா? நிச்சயம் சாத்தியமே.
ஓலா நிறுவனம் ‘S1 Pro சோனா’ என்ற தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பியர்ல் ஒயிட் (Pearl white) மற்றும் தங்க நிறம் என இரட்டை நிறத்தில் 24 காரட் தங்கத்தால் உருவாக்கபட்ட, இல்லை இல்லை உருக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு லிமிடெட் எடிஷன் வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் சைடு ஸ்டாண்ட், ஃபுட் ரெஸ்ட், கண்ணாடிகள், பில்லியனர் கைப்பிடி மற்றும் பிரேக் லீவர்கள் போன்ற பாகங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் ஹேண்டில் பார், முன்புற ஃபோர்க்குகள், ஸ்விங் ஆர்ம், பின்புற சஸ்பென்ஷன் ஸ்ப்ரிங், முன்புற ஃபெண்டர் ஆகியவற்றிலும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் முன்புறத்திலும் பின்புறத்திலும் உள்ள அலாய் வீல்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இப்படி இந்த வாகனத்தில் தங்கம் மூலம் பூசப்பட்ட பாகங்கள் உள்ளதால் டூயல் டோன் தீமில் பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிக்கிறது. மேலும் இவற்றைத் தவிர அமர்வதற்கு வசதியாக Napa லெதர் சீட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சீட் தங்க இழைகளால் தைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் கோல்டு தீமில் உள்ள Move OS இன்டர்ஃபேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த எடிஷனக்கு ஏற்றாற்போல் பிரத்தியேகமாக தங்க நிறத்தில் முன்பக்கத் திரை நமக்குத் தோன்றுவது இந்த வாகனத்தின் இன்னொரு ப்ளஸ்.
இந்த சோனா எடிஷன் அதனுடைய S1 pro பேஸ் வேரியன்ட் போலவே ஒரு முறை சார்ஜ் செய்தால் 195 கிமீ தூரம் வரை செல்லக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 120 கிமீ. 2.6 விநாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டும் அளவிற்கு 11kW அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்கத்தால் செய்யப்பட்ட இந்த ‘S1 Pro சோனா’ ஸ்கூட்டர் விற்பனைக்கு வராது எனவும், ஓலா நிறுவனம் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்குப் பரிசளிப்பதற்காக இந்த ஸ்கூட்டரை தயாரித்திருப்பதாகவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன போட்டி என்று இனிமேல் அறிவிக்கும் ஓலா.
அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகை வாங்குவதே பெரும்பாடு . இதுல தங்கத்துல ஸ்கூட்டரா? தாங்காதுப்பா நாடு!