Ola: `ரூ.39,999 -க்கு ஸ்கூட்டர்' - டபுள்ஸ் அடிக்க முடியாது; ஆனால் என்ன ஸ்பெஷல்?
ஸ்கூட்டர் செக்மென்ட்டில் இதுவரை ஓலா, B2B (Business to Business) எனும் கமர்ஷியல் செக்மென்ட் ஏரியாவில் நுழையவில்லை. இப்போது அதிலும் டயர் பதித்துவிட்டது ஓலா. ஆம், கிக் (Gig) எனும் பெயரில் ஒரு கமர்ஷியல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மொத்தம் 2 வேரியன்ட்களில் இந்த ஸ்கூட்டர் வந்திருக்கிறது. அடிப்படை வேரியன்ட்டின் விலை 39,999 ரூபாய். இது ஸ்டாண்டர்டு கிக் வேரியன்ட். இதுவே Gig+ எனும் டாப் வேரியன்ட்டின் விலை 49,999 ரூபாய். பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் Yulu என்றொரு மாடல் ஸ்கூட்டர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்குப் போட்டியாகத்தான் ஓலாவும் இந்த ஃப்ளீட் மார்க்கெட்டில் களம் இறங்கியிருக்கிறது. இது ரொம்பவும் எடை குறைவாக உள்ள, அதிக வேகம் போகாத ஸ்கூட்டர்.
இதை கமர்ஷியல் செக்மென்ட்டுக்கு ஏற்றபடியே வடிவமைத்திருக்கிறார்கள். முன் பக்கம் பெரிய சீட் இருக்கிறது. ஆனால் இது சிங்கிள் சீட்தான். ஆம், இதில் டபுள்ஸ் அடிக்க முடியாது. ஆனால், பின் பக்கம் ஒரு பெரிய கேரியர் கொடுத்திருக்கிறார்கள். இதில் பொருட்களை ஏற்றிக் கொண்டு லோடு அடிக்கலாம்.
இந்த செக்மென்ட்டுக்கு டிஸ்க் பிரேக்ஸ் என்பது பராமரிக்கச் செலவு அதிகமாக இருக்கும் என்பதால், இரண்டு பக்கமும் டிரம் பிரேக்ஸ்தான் கொடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல் முன் பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் செட்அப் கொடுத்திருக்கிறார்கள்.
மோட்டாரைப் பொருத்தவரை இதில் 250-Watt மோட்டார் இருக்கிறது. என்னடா இது, 1kW கூடக் காணோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதனால் இதன் பவர் மிகவும் குறைவுதான். அதனால் டாப் ஸ்பீடும் ரொம்பக் குறைவாகத்தான் இருக்கும். இதில் 25 கிமீ வரைதான் வேகம் போக முடியும். நீங்கள் நினைப்பது சரிதான்; அப்படியென்றால், இந்த ஸ்கூட்டரை முறைப்படி பதியத் தேவையில்லை; ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை.
ஆனால், இது மட்டுமே வேலைக்கு ஆகாதே! அதனால்தான் டாப் எண்டான Gig+ வேரியன்ட் இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 45 கிமீ. இதில் பவர்ஃபுல்லான 1.5kW மோட்டார் கொடுத்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளவும்; நீங்கள் ஸ்டாண்டர்டு Gig மாடலை வாங்கினால் பதிவுச் சான்றிதழ் தேவையில்லை. இதுவே Gig+ மாடலுக்கு ரிஜிஸ்ட்ரேஷன், சாலை வரி, ஹெல்மெட், லைசென்ஸ் எல்லாமே முக்கியம்.
இரண்டு ஸ்கூட்டர்களிலுமே கழற்றி மாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் 1.5kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். இதில் டாப் மாடலான Gig+ல் 2 பேட்டரிகள் வேண்டுமானால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
ஓலாவைப் பொறுத்தவரை ரேஞ்ச் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஸ்டாண்டர்டு Gig மாடல், சிங்கிள் சார்ஜுக்கு 112 கிமீ வரை போகும் என்கிறது ஓலா. இதுவே Gig+ மாடல் 157 கிமீ வரை போகுமாம். இது டபுள் பேட்டரிக்கு. சிங்கிள் பேட்டரி என்றால், 81 கிமீ.
ஓலா ஆப் மூலம் இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் செட்அப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறதாம் ஓலா. ஆனால், அது பற்றி இன்னும் தகவல்கள் வரவில்லை. இப்போதைக்கு ரெண்டரிங் படங்களைத்தான் வெளியிட்டிருக்கிறது ஓலா. முறையான கெர்ப் எடை, டயர் அளவு, எத்தனை கிலோ லோடு அடிக்கலாம் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.
Gig-ன் விலை கிக் ஆகத்தான் இருக்கிறது. எல்லாம் ஓகே ஓலா பேட்டரி தரமானதாகவும் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க ப்ளீஸ்!