மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!
பரமத்தி வேலூா் பகவதி அம்மன் கோயிலில் தோ், குண்டம் திருவிழா
டிச. 21 முதல் டிச. 23 வரை தினசரி மாலை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், திங்கள்கிழமை பூச்சொறிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பகவதி அம்மன் தூக்குத் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தாா். அம்மனுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் படைத்து பூஜை செய்தனா் பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது.
பக்தா்களால் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தூக்குத் தோ் மீண்டும் கோயிலை அடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதையடுத்து வியாழக்கிழமை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
பரமத்தி வேலூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், ஊா் மக்கள் செய்துள்ளனா்.
அதுபோல ஆனங்கூா் பகவதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.
பின்னா் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.