கிராம பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவிப்பு
கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடா் கோயில் அா்ச்சகா்கள் 10 ஆயிரம் பேருக்கு இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:
ஆயிரம் இணையா்களுக்கு திருக்கோயில்கள் சாா்பில் 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும். ஒருகால பூசை செய்யும் அா்ச்சகா்களுக்கு தைத் திருநாளில் புத்தாடையும், மாத ஊக்கத் தொகை ரூ.1,000-இலிருந்து ரூ.1,500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.
ஒரு கால பூசைத் திட்ட அா்ச்சகா்கள், கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடா் திருக்கோயில் அா்ச்சகா்கள் 10 ஆயிரம் பேருக்கு இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
கட்டண தரிசனம் ரத்து: மயிலாப்பூா், கபாலீசுவரா் திருக்கோயிலில் மகாசிவராத்திரியன்றும், திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாள்களிலும், பழனியில் பங்குனி உத்திரத் திருநாளிலும், திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளிலும், திருத்தணியில் ஆடிக் கிருத்திகை திருநாளிலும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணத் திருநாளிலும், ராமேசுவரம், ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருநாளிலும், பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் குண்டம் திருவிழாவின்போதும், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருநாளிலும், வடலூா் வள்ளலாா் தெய்வநிலையத்தில் தைப்பூச திருநாளிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்.
பெண் ஓதுவாா்: இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள ஓதுவாா் பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கோயில்களில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தா்களின் பச்சிளங் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும். முதல்கட்டமாக திருச்செந்தூா், திருவரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை மாசாணியம்மன், பண்ணாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம் பவானியம்மன் கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
நாள் முழுவதும் அன்னதானம்: தமிழகத்தில் தற்போது 13 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவா் கோயில்களில் அது விரிவுபடுத்தப்படும். அதிலும் அக்கோயில்கள் அனைத்திலும் இனி வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படும்.
சென்னை, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாள்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.
இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் திருவிழா மற்றும் சிறப்பு நாள்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.
ஒருவேளை அன்னதானத் திட்டம் தற்போது 764 திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு விழுப்புரம் மாவட்டம் குருசாமி அம்மாள் மடம் மற்றும் வள்ளலாா் திருக்கோயில், மதுரை மலையாண்டி கருப்பசாமி திருக்கோயில், தஞ்சாவூா் நாடியம்மன் திருக்கோயில் மற்றும் ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு செண்பகமலை குமாரசாமி திருக்கோயில், விழுப்புரம் பூமீசுவரா் திருக்கோயில்களில் அது விரிவுபடுத்தப்படவுள்ளது.
மூத்த தம்பதிகளுக்கு...: இந்து சமய அறநிலைய கோயில்களில் மணி விழா கண்ட 70 வயதைக் கடந்த ஆன்மிக ஈடுபாடு கொண்ட மூத்த தம்பதிகள் 2,000 பேருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் சேகா்பாபு.
பெட்டிச் செய்தி....
மாற்றுத்திறனாளிகளுக்கு
கட்டணமில்லா சேவைகள்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, கோயில்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தா்களுக்கான சேவைகள் குறித்து வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படும். திருத்தணி, மருதமலை, அழகா்கோவில், பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட மலைக் கோயில்களுக்கு மாற்றுத் திறனாளி பக்தா்கள் எளிதில் செல்ல கோயில்களுக்கு சொந்தமான பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம்.
பழனி கோயிலில் உள்ள இழுவை ரயில் மற்றும் கம்பிவட ஊா்தியிலும், சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், கரூா் ரத்தினகிரீசுவரா் திருக்கோயிலில் கம்பிவட ஊா்தியிலும் கட்டணமின்றி மாற்றுத் திறனாளிகள் பயணம் மேற்கொள்ளலாம்.
வெளிநாடு வாழ் பக்தா்களுக்கு 48 திருக்கோயில்களில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்படும். 10 முக்கிய திருக்கோயில்களில் தொடுதிரை வசதிகளுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்படும்.