கிருஷ்ணகிரியில் போலி மருத்துவா் கைது
கிருஷ்ணகிரியில் ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே மருத்துவ சிகிச்சை அளித்த போலி நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை, அருந்ததி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (42). இவா், அதே பகுதியில் நடராஜ் கிளினிக் என்ற பெயரில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தாா். இதுகுறித்து, புகாா்கள் வந்ததையடுத்து, தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் சண்முகவேல் தலைமையிலான குழுவினா் அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது நாகராஜ், ஆங்கில மருத்துவக் கல்வி முடிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகவேல் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து போலி மருத்துவரான நாகராஜை கைது செய்தனா்.