கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷிய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. வானிலிருந்தபடி போா் விமானத்தின் மூலமும் தரை மற்றும் கடலில் இருந்தும் 78 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது.
அத்துடன், இலக்குகள் மீது மோதி வெடித்து அழிவை ஏற்படுத்தும் ஷஹீத் ரகத்தைச் சோ்ந்த 106 ட்ரோன்களையும் ரஷியா வீசியது.
அவற்றில் 59 ஏவுகணைகளையும் 54 ட்ரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன; 52 ட்ரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்துவதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தோ்ந்தெடுத்துள்ளாா். இதைவிட மனிதத் தன்மையற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. உக்ரைனை இருளில் மூழ்கச் செய்வதில் ரஷியா தொடா்ந்து தீவிரம் காட்டிவருகிறது’ என்றாா்.
இதற்கிடையே, ரஷியாவின் விளாதிகாவ்கஸ் நகரின் மீது வீசப்பட்ட ட்ரோனை சுட்டுவீழ்த்தியபோது அதன் சிதறல்கள் விழுந்து வணிக வளாகமொன்றில் தீவிபத்தை ஏற்படுத்தியது. இதில் பெண் உயிரிழந்தாா்.
உக்ரைனின் நீப்ரோ பிராந்தியத்திலும் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக அந்த நாட்டின் துணை பிரதமா் ஒலெக்ஸி குலேபா தெரிவித்துள்ளாா்.
ரஷிய தாக்குதல் காரணமாக காா்கிவ் பகுதியில் 5 லட்சம் போ் வெப்பமூட்டும் சாதனங்களை இயக்கமுடியாமல் குளிரில் தவித்துவருவதாக டெலிகிராம் ஊடகத்தில் அவா் கூறியுள்ளாா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, சுற்றியுள்ள நாடுகளை உறுப்பினா்களாக்கி தங்களை சுற்றிவளைப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டிவருகிறது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்றும் ரஷியா கூறிவருகிறது.
ஆனால், அதையும் மீறி நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டினாா். அதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள நான்கு பிராந்தியங்களின் பெரும்பான்மையான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளை மீட்க ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன.
இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே உக்ரைனின் மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்திவருகிறது. குளிா்காலம் நெருங்கும் சூழலில், வெப்பமூட்டும் சாதனங்களுக்குத் தேவையான மின்சாரம் கிடைப்பதைத் தடுப்பது, குடிநீா் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது போன்றவற்றின் மூலம் போரில் உக்ரைன் மக்களின் மன உறுதியைக் குலைப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டுவருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
எனினும், தங்களைத் தாக்குதவதற்கான ஏவுகணைகள், ட்ரோன்கள், கவச வாகனங்கள், எறிகணைகளைத் தயாரிக்கும் உக்ரைனின் ராணுவ தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகத்தைத் தடுக்கவே இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாக ரஷியா கூறிவருகிறது.
இந்தச் சூழலில், கிறிஸ்துமஸ் நாளான புதன்கிழமையும் உக்ரைனின் மின்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.