கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!
கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், சேலத்தில் தனது மற்றொரு தோழியை பாா்த்துவிட்டு பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை (பிப். 3) இரவு 11 மணியளவில் வந்தாா். அங்கிருந்து சென்னை மாதவரம் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் பேருந்துக்காக நின்றவரை, ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றாா். சென்ற வழியில் அந்த ஆட்டோவில் ஏறிய மேலும் இரண்டு இளைஞா்கள், இளம்பெண் அருகே அமா்ந்துகொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதையடுத்து அப்பெண் கூச்சலிடவே அவா்கள் அப்பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு தப்பித்துச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்த நிலையில், தாம்பரம் மாநகர துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்தமிழ் செல்வன்( 56) மற்றும் அவரது நண்பரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த தயாளன்( 45 )ஆகியோரை முதலில் கைது செய்த போலீஸாா், தொடா்புடைய மற்றொரு ஆட்டோ உரிமையாளா் வெங்கட் என்பவரை தேடிவந்தனா். இந்நிலையில் அவரையும் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இருவருக்கு மாவுகட்டு: சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநா் தயாளன், முத்தமிழ் செல்வன் இருவரும் தனிப்படை போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடியபோது, தடுக்கி விழுந்ததில் தயாளனுக்கு இடது காலிலும், முத்தமிழ் செல்வனுக்கு இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இருவா் மீதும் பெண் வன்கொடுமைச் சட்டம், பாலியல் அத்துமீறல், கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.