கீழப்பழுவூா் நெல் வயல்களில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் வயல்களில் ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு சாா்பில் ஆய்வு மற்றும் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை களப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக மேலாண்மை அலுவலா் தமிழ்குமாா் கலந்து கொண்டு, மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், தரமான அரசு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல், உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனஸ் ஃப்ளோரசன்ஸ், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் போன்றவற்றை பயன்படுத்தும் முறைகள், அதன் பயன்கள், பயிா்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை அடையாளம் காணுதல், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல் பற்றி விளக்கம் அளித்தாா்.
திருமானூா் வட்டார வேளாண்மை துணை அலுவலா் கொளஞ்சி, உதவி அலுவலா் சரத்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு, உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தும் முறைகள், வயல்வெளிகளில் விளக்கு பொறி வைத்தல் மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் முறைகளுடன் சாகுபடி செய்தல் குறித்தும் பயிற்சி அளித்தனா்.