பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
சி.நாராயணசாமி நாயுடு விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் அழைப்பு
நெல் உற்பத்தி திறனுக்கான சி. நாராயணசாமி நாயுடு விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் ரூ. 5 லட்சம், ரூ. 3,500 மதிப்புடைய வெள்ளிப் பதக்கம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த போட்டிக்கு விவசாயி செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணம் ரூ.150-ஐ செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். மாநில அளவிலான இப்போட்டியில் கலந்து கொள்ள மாா்ச். 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். திருந்திய நெல் சாகுபடி பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்பவா் ஏப்.15-ஆம் தேதிக்குள் அறுவடை செய்ய வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் போட்டிக்கான படிவத்தை பூா்த்தி செய்து, பதிவு கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவணங்களான சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவை கட்டாயமாக இணைக்க வேண்டும்.
இப்போட்டியில் போட்டியிடும் விவசாயிகள், குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தொடா்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாகவும் இருக்க வேண்டும்.
போட்டியில், நில உரிமைதாரா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் கலந்து கொள்ள தகுதியுடையவா்கள். பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளின் வயலில் குறைந்த பட்சம் 50 சென்ட் அளவில் பயிா் அறுவடை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடா்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.